இபிஎஸ் பிரச்சாரத்தில் துயரம்.. பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் பலி!
சிவகங்கையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து விட்டுத் திரும்பும்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அணிவகுப்பில் வந்த வாகனம் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று இரவு சிவகங்கை மாவட்டத்தில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, அடுத்தகட்டமாகப் புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பிரசாரம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கார் அணிவகுப்பு சென்றுக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பிற்கு வந்த வாகனம் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (27) என்பது தெரியவந்தது. பிரசாரக் கூட்டத்தைப் பார்க்க வந்தாரா அல்லது தற்செயலாகச் சாலையைக் கடந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது
குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதகுபட்டி போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாதுகாப்பு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்ற இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் திரண்டதால் சோகமான சூழல் காணப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் கார் அணிவகுப்பு சென்றபோது நடைபெற்ற இந்த அசம்பாவிதம் குறித்து எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.