குஜராத்தில் துயரம்... பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் பலி - தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு!

 

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள லக்தார்-விராம்கம் நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜ்கோட் மாவட்டத்தின் கட்கா கிராமத்தைச் சேர்ந்த 'பர்வாட்' சமூகத்தைச் சேர்ந்த சுமார் 500 முதல் 700 பக்தர்கள், பஹுச்சராஜி கோவிலுக்குப் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் லக்தார் தாலுகாவிற்குட்பட்ட பாஸ்கர்பாரா கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 6 பக்தர்கள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் ஓட்டுநர் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் லக்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு விராம்கம் மற்றும் ராஜ்கோட் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் முந்த்வா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். லாரியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், டிரைவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுக்காகப் பக்திப் பரவசத்துடன் பாதயாத்திரை சென்ற பக்தர்களின் பயணம், இப்படி ஒரு கோர விபத்தில் முடிந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.