குமரியில் சோகம்... சாலையோரத்தில் காட்டு யானை சுருண்டு விழுந்து உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த காட்டு யானை ஒன்று திடீரெனத் தரையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீரிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலையோரக் கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரும்பாறை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தை ஒட்டிய சாலையில் வந்துகொண்டிருந்த ஆண் யானை ஒன்று திடீரெனத் தரையில் சுருண்டு விழுந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் அழகியபாண்டியபுரம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் ஸ்ரீதர் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தபோது, யானை ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
நெல்லையிலிருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் யானையின் உடலைப் பரிசோதித்தபோது, அதன் உடலில் காயங்களும் வாயில் புண்களும் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திலேயே பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் அன்பு கூறுகையில், யானையின் இறப்புக்கான உண்மையான காரணம் உடல் கூராய்வு அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.