கன்னியாகுமரியில் சோகம்... கொய்யாப்பழம் பறித்தபோது மாடியில் இருந்து தவறிவிழுந்து பெண் உயிரிழப்பு!
கன்னியாகுமரி அருகே வீட்டின் மாடியில் இருந்து கொய்யாப்பழம் பறிக்க முயன்ற போது தவறி விழுந்து படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அடுத்த ஈத்தவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமுதா (55). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அமுதா வீட்டின் மாடியில் ஏறி, அதனை ஒட்டியிருந்த மரத்தில் இருந்த கொய்யாப்பழத்தைப் பறிக்க முயன்றுள்ளார். அப்போது மாடியின் ஓரத்தில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட் விளிம்பில் காலடி வைத்தபோது, அது திடீரென உடைந்துள்ளது. சீட் உடைந்ததில் நிலைகுலைந்து மாடியில் இருந்து கீழே விழுந்த அமுதா பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் களியக்காவிளை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.