கரூரில் துயரம்... மாயமான 3 நாட்களுக்குப் பின் 10ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!

 

கரூர் அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி இனியா (15), மாயமான மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்லது. ‘

இனியா, அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி. இவரது தந்தை மணிகண்டன், தாய் சாந்தி. கடந்த மார்ச் 19-ஆம் தேதி இரவு, மாணவி செல்போன் பயன்படுத்தியதை அவரது பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அன்றிரவே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் காலை மகளைக் காணாத அதிர்ச்சியில் பெற்றோர் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்நிலையில், இன்று காலை மாணவியின் வீட்டின் அருகே உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் அவரது உடல் மிதப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தற்கொலையா அல்லது மரணத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா என்பதைக் கண்டறியத் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை நடத்தினர். 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நெருங்கி வரும் வேளையில், ஒரு சிறுமி இப்படி விபரீத முடிவெடுத்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு நேரங்களில் மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இத்தகைய சமயங்களில் பெற்றோர்கள் கண்டிப்பைக் குறைத்து, அன்புடன் வழிகாட்டுவது அவசியம். தற்கொலை எண்ணங்கள் தோன்றினால் தமிழக அரசின் 104 என்ற எண்ணையோ அல்லது சினேகா (044-24640050) மையத்தையோ தொடர்பு கொள்ளலாம்.