கரூரில் துயரம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் புடவையால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக மீட்பு! 

 

கரூர் மாவட்டம் சின்னகாளிபாளையத்தில் உள்ள பண்ணைத் தோட்டக் கிணற்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரின் உடல்கள் புடவையால் கட்டப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் வயதான தம்பதியான ராமசாமி மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோர் வழக்கமாக விவசாயம் செய்து வசித்து வந்துள்ளனர்.

இவர்களது திருமணமான மகள் சுகுணா, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவம்பர் 18) தோட்டத்தில் உள்ள கிணற்றில் ராமசாமி, ஜானகி, மகள் சுகுணா மற்றும் சுகுணாவின் இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் உடல்களும் மிதப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். புடவையால் கட்டப்பட்ட உடல்கள்: கிணற்றில் மிதந்த ஐந்து பேரின் உடல்களும் புடவையால் ஒன்றாகக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

திருமணமான மகள் சுகுணாவின் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனை மற்றும் மன உளைச்சல் காரணமாக, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றிலிருந்து ஐந்து பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குடும்பப் பிரச்சனை காரணமாக நடந்த கூட்டுத் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடத் தமிழக அரசின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணி நேரமும் செயல்படும்) சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 - 24640050