கேரளத்தில் சோகம்... மலையிலிருந்து ராட்சத பாறை உருண்டு விழுந்து ஒருவர் பலி!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மலையிலிருந்து உருண்டு வந்த ராட்சத பாறை விழுந்ததில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 59 வயது நபர் உயிரிழந்தார்.

கட்டப்பனை அருகே உள்ள கடமக்குழி பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன் (59), தனது மனைவியுடன் இன்று காலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மலையின் மேற்பகுதியில் இருந்து பெரிய பாறை ஒன்று திடீரென உருண்டு வந்தது.

இதைக் கண்ட தம்பதியினர் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் செபாஸ்டியன் சென்ற திசையிலேயே பாறை உருண்டு வந்ததால், அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்கும் பாறைக்கும் இடையில் அவர் சிக்கிக்கொண்டார்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியாக இது இருப்பதாகவும், அங்கு மேலும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதால் போலீசார் அப்பகுதிக்குச் செல்வதை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.