கிருஷ்ணகிரியில் சோகம்.. லாரி மோதி 7 வயது சிறுவன் உட்பட 3 பேர் பலி; டிரைவர் தப்பியோட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய கோர விபத்தில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவன் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள எகடதாம்பள்ளி பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் இரண்டு ஆசிரியர்களும், 2 ஆம் வகுப்புப் பயிலும் 7 வயது சிறுவனும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்த அதிவேக லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
இந்த பயங்கர விபத்தில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பியோடிவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.