நைஜரில் துயரம்... பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 42 ராணுவ வீரர்கள் பலி; 18 பேர் படுகாயம்!
Aug 9, 2026, 19:30 IST
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் டோக்குவா பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கரச் சாலை விபத்தில் 42 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, தங்களது பணிகளில் சேர்வதற்காகப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 18 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில், இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.