ஸ்ரீபெரும்புதூரில் சோகம்..தாமரை பறிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கிய அக்கா - தம்பி! 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில், கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். அவனது அக்காள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராம்கி. இவரது மகள் ஜனதுவிசா மற்றும் 5 வயது மகன் நிதிர்ஷன் ஆகியோர் நேற்று காலை பக்கத்து வீட்டுத் தோழி மற்றும் அவரது பாட்டியுடன் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்திற்குச் சென்றுள்ளனர்.
குளத்தில் அழகாகப் பூத்திருந்த தாமரை பூக்களைக் கண்டதும், அதைப் பறிக்க ஆசைப்பட்டுத் தண்ணீரில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கரையை ஒட்டியிருந்த ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர்.
சிறுவர்கள் நீரில் மூழ்கியதைக் கண்டு கரையில் இருந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர். உடனே ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து இருவரையும் மீட்டு, உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, 5 வயது சிறுவன் நிதிர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது அக்காள் ஜனதுவிசாவிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை காலம் என்பதால், சிறுவர்கள் நீர் நிலைகளுக்குச் செல்லும்போது பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாத குளங்கள் மற்றும் குட்டைகளில் இறங்க அனுமதிக்க வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.