தஞ்சாவூரில் சோகம்... பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் உயிரிழப்பு!

 

தஞ்சாவூர் மாவட்டம் அருகே வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூட்டிய காருக்குள், 6 வயது சிறுவன் ஒருவன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமன் (6) என்ற சிறுவன், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளையொட்டி தனது பெரியப்பா மற்றும் அவரது மகனுடன் வெளியே சென்றுள்ளான். அவர்கள் கார் மூலம் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர். அப்போது, பெரியப்பா காரை நிறுத்திவிட்டுத் தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கியுள்ளார். சிறுவன் தமன் காரின் பின் இருக்கையிலேயே அமர்ந்திருந்ததை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காரின் கதவுகள் மற்றும் கண்ணாடிகள் அனைத்தையும் முழுமையாகப் பூட்டிவிட்டு அவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

வீட்டிற்கு வந்த சிறுவன் தமனை நீண்ட நேரமாகியும் காணாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அவன் வழக்கமாக விளையாடும் இடங்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் தீவிரமாகத் தேடினர். உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டினர் எனப் பல இடங்களில் தேடியும் சிறுவன் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, மாலை 7 மணியளவில் சந்தேகத்தின் பேரில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது காரின் உட்புற வெப்பம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத்திணறி, சிறுவன் தமன் மயங்கிய நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு குடும்பத்தினர் அலறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவெளிகளிலோ அல்லது வீட்டின் அருகிலோ காரை நிறுத்திவிட்டுச் செல்லும்போது, குழந்தைகள் யாராவது உள்ளே இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும் என்றும், வெயில் காலங்களில் பூட்டிய காருக்குள் சில நிமிடங்களிலேயே வெப்பநிலை ஆபத்தான அளவிற்கு உயர்ந்துவிடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.