நள்ளிரவில் சோகம்... கார் விபத்திற்குள்ளானதில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழப்பு!

 

நேற்று நள்ளிரவு பெரும் சோகமாக, கேரள மாநிலத்திற்கு காரில் கல்விச் சுற்றுலா சென்ற திண்டுக்கல் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில், நேற்று நள்ளிரவு 11:42 மணியளவில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாகச் சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.