காலையிலேயே சோகம்... பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார் - திரையுலகினர் நேரில் அஞ்சலி!

 

மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஷாஜி குமார், உடல்நலக் குறைவு காரணமாகக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற நடிகர் திலீப் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்பின் போது அவருக்குத் திடீரென கடும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது தத்ரூபமான காட்சி அமைப்புகளால் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக ஷாஜி குமார் விளங்கி வந்தார். மோகன்லால் நடித்த மாபெரும் வெற்றிப்படமான 'புலிமுருகன்', 'ஒடியன்' உட்பட 50-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து திரைத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.

தமிழில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான 'பொன்னர் சங்கர்', 'மம்பட்டியான்' மற்றும் 'சாகசம்' ஆகிய முக்கியத் திரைப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் திடீர் மறைவு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.