தூத்துக்குடியில் சோகம்.. மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி மரணம்!

 

தூத்துக்குடியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து, நிரம்பிய தண்ணீர் தொட்டியின் மோட்டாரை அணைக்க முயன்ற 11 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி காதர்மீரான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது 11 வயது மகள் பிரியதர்ஷினி. சிறுமி பிரியதர்ஷினி வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் மேல்நிலை நீர் தொட்டி நிரம்பி வழிவதைக் கண்டுள்ளார். உடனடியாகத் தண்ணீர் வீணாவதைத் தடுப்பதற்காக வாட்டர் மோட்டாரை அணைக்கச் சென்றுள்ளார். அப்போது சுவிட்சை இயக்கிய போது எதிர்பாராதவிதமாகச் சிறுமி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் கிடந்த சிறுமி பிரியதர்ஷினியை, பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமியின் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தெர்மல்நகர் காவல் நிலையப் போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இச்சம்பவம் காதர்மீரான் நகர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.