தூத்துக்குடியில் துயரம்... தேவாலய மேற்கூரை சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமானப் பணியின் போது தேவாலயத்தின் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் புதுப்பித்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் தேவாலயத்தின் மேற்கூரை திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்குப் பணிபுரிந்து கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் சக ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்து நகர் போலீசார், விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். கட்டுமானப் பணியில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.