தூத்துக்குடியில் சோகம்... குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை!

 

தூத்துக்குடியில் குடும்பப் தகராறு காரணமாக வடமாநிலப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சீதா நெவார் என்ற பெண், தூத்துக்குடியில் உள்ள தனது வாடகை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிப்காட்  காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் குறித்த பல்வேறு பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர் பிழைப்பிற்காகத் தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாகத் தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இவர்கள் வசித்து வந்துள்ளனர்.

கணவன் - மனைவி இடையே கடந்த சில நாட்களாகவே கடுமையான குடும்பப் பிரச்சனை நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த நிலையில் இருந்த சீதா நெவார், இன்று அவரது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கடுமையான மன உளைச்சலால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தற்பொழுது சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறுக்கான உண்மைப் பின்னணி என்ன என்பது குறித்துப் போலீசார் கணவரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணங்களோ மேலோங்கும்போது, அதிலிருந்து விடுபடத் தமிழக அரசின் இலவச மாநில மனநல உதவி எண் 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை பெறலாம்.