மதுரை அருகே சோகம்.. பாலத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி; 14 பேர் படுகாயம்!

 

மதுரை அருகே கப்பலூர் சுற்றுச்சாலையில் திருமண விழாவிற்குச் சென்ற மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக மினி பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.

மதுரை - கப்பலூர் சுற்றுச்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள பாலத்தில் ஏற முயன்ற மினி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் மையத்திலிருந்த தடுப்பை மோதித் தாண்டிச் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்திலிருந்த 14 பயணிகள் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.