தஞ்சை அருகே சோகம்.. காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே தீப்பிடித்த வீட்டை அணைக்க முயன்றபோது சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சின்னஅம்மன்குடி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகையன், தனது மனைவி செல்வி மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் அபிநயாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சமையல் கீற்றுக் கொட்டகையில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் இருந்த மூவரையும் பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.
வீட்டின் தீயை அணைக்கும் தீவிர முயற்சியில் ஊர் மக்கள் ஈடுபட்டிருந்த போது, கொட்டகைக்குள் சமையல் காஸ் சிலிண்டர் இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. திடீரெனத் தீயின் உஷ்ணம் தாங்காமல் காஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் தீயை அணைக்க முயன்ற கிராம மக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் உட்பட 10 பேர் கடுமையான தீக்காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தைத் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் ரேவதி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பழனிவேல், காசிநாதன், வேம்பையன் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.