தம்பியின் திருமண நாளில் சோகம்.. மின்சாரம் தாக்கி அண்ணன் பலி!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில், தம்பியின் திருமணக் கொண்டாட்டத்தின் போது அண்ணன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியுடன் தொடங்க வேண்டிய திருமண வீடு, தற்போது மரண ஓலத்துடன் சோகத்தில் மூழ்கியுள்ளது.
விஜயநகரம் மாவட்டம் மிர்த்திவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சதிஷ் (32). ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இவர், தனது தம்பியின் திருமணத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சதிஷ், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த ஆண்டுதான் சதிஷிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது அவர் உயிரிழந்திருப்பது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
அண்ணனின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நடைபெறவிருந்த தம்பியின் திருமணத்தைப் பாதியிலேயே ரத்து செய்தனர். கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க வேண்டிய இல்லம், சதிஷின் உடலைப் பார்த்து கதறித் துடிக்கும் மயானமாக மாறியது. இந்தச் சோகமான விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின் கசிவு எப்படி ஏற்பட்டது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சுப காரியத்திற்காகக் குடும்பமே ஒன்று கூடியிருந்த வேளையில், வீட்டின் மூத்த மகனைப் பறிகொடுத்த இந்தச் சம்பவம் மிர்த்திவலசா கிராமம் முழுவதையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.