தமிழ் புத்தாண்டில் சோகம்... தமிழக மீனவர்கள் 4 பேரைக் கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 

தமிழகக் கடலோரப் பகுதிகளில் மீன் பிடித் தடை காலம் இன்று ஏப்ரல் 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படை தூக்கிச் சென்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாங்க வலையைச் சுருட்ட நினைக்கும் போதே, அவங்க எங்களைச் சுருட்டிட்டாங்களே" என மீனவக் குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன.

மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை "எல்லை தாண்டி வந்துவிட்டீர்கள்" என்ற வழக்கமான பல்லவியைப் பாடி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களைக் கைது செய்துள்ளது.

ஜேசுராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை ராணுவம் வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதிதான் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வடு மாறுவதற்குள், தடை காலம் தொடங்கும் முதல் நாளிலேயே இந்த அடுத்தக்கட்ட ‘வேட்டை’ நடந்துள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காகத் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடித் தடை காலம் கடைப்பிடிக்கப்படும்.

இன்று (ஏப்ரல் 14) நள்ளிரவு முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை விசைப்படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடத் தயாராக இருந்த நிலையில், இந்தக் கைது செய்தி இடியாக இறங்கியுள்ளது.

மீனவர்கள் கைது விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கோபத்தில் இருக்கிறார். "பழைய திமுக-வை மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்... இதுதான் பிரதமர் மோடிக்கான கடைசி எச்சரிக்கை!" என அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக முழங்கியிருந்தார். ஆனால், அந்த எச்சரிக்கை இலங்கை கடற்படைக்கு எட்டவில்லையா அல்லது மத்திய அரசு கண்டு கொள்ளவில்லையா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!