சோகம்... குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவன் தற்கொலை!
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேஜஸ் என்ற மாணவன் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தான். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில், தேஜஸ் ஒரு பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தான். குறைந்த மதிப்பெண் எடுத்த அந்தப் பாடத்தை மீண்டும் எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்த வகுப்புக்குச் செல்வதற்கான மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் எனப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அந்த மாணவன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளான்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த நெருக்கடியால் மனமுடைந்த தேஜஸ், நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டான். துள்ளித் திரிந்த மகன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறைதான் இந்தத் தற்கொலைக்குக் காரணமா? என்பது குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆசிரியர்களின் ஊக்கமும், அரவணைப்பும் தேவைப்படும் சூழலில், இதுபோன்ற கெடுபிடிகள் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.