திருச்செந்தூரில் தரிசனம் முடிந்து திரும்பியபோது சோகம்... லாரி மீது கார் மோதி இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், காரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று முருகனைத் தரிசனம் செய்துள்ளனர். சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு, அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்குக் காரில் மகிழ்ச்சியுடன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது கார் நேற்று காலை வாணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்த கார், கண்சிமிட்டும் நேரத்திற்குள் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கி சிதைந்தது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த காந்திமதி (30) என்ற இளம்பெண், இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் உயிரிழந்தார். நல்லவேளையாக, காரின் பின் இருக்கையில் இருந்த சுரேஷ் உள்ளிட்ட மற்ற 5 பேரும் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார், உயிரிழந்த காந்திமதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான உண்மையான காரணம் தூக்கக் கலக்கமா அல்லது அதிவேகமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.