டியூஷன் சென்ற போது சோகம்.. தம்பியின் கண்முன்னே கார் மோதி 12 வயது சிறுமி பலி!

 

கேரள மாநிலம் வயநாட்டில் தம்பியுடன் டியூஷனுக்கு நடந்து சென்ற 12 வயது சிறுமி மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்த ராஜேஷ் - ஸ்வப்னா தம்பதியின் மகள் திவா (12). இவர் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தனது 7 வயது தம்பியுடன் எடவகை ரெண்டேனால் பகுதியில் டியூஷனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நடந்து சென்ற சிறுமி மற்றும் அவரது தம்பி மீது பயங்கரமாக மோதியது.

கார் மோதிய வேகத்தில் சிறுமி திவா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடன் சென்ற அவரது தம்பி அதிர்ஷ்டவசமாகச் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அப்பகுதி மக்கள் உடனடியாகச் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மானந்தவாடி காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சஜி என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.