ஜார்க்கண்டில் கோர விபத்து.. 8 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 33-ல் (ராஞ்சி–பாட்னா நெடுஞ்சாலை) இன்று அதிகாலை ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்கார்பியோ காரில் பயணித்த 14 பேரும் பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கோயிலுக்குச் செல்வதற்காக ராஜ்ரப்பா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 33-ல் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சேதமடைந்த வாகனத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கவும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் உதவினர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.