அசத்தல்.. ரூ20க்கு ரயிலில் முழு உணவு.. !!

 

நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலானவர்களின் ஒரே சாய்ஸ் ரயில்கள் தான். நடுத்தர வர்க்கத்தினரின் வரப்பிரசாதமாக ரயில்கள் தான் அமைந்துள்ளன.  குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே  டிக்கெட் முன்பதிவு செய்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் .இவ்வாறு பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்   உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது.

இந்நிலையில், ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கும் திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ரயில் பயணத்தின் போது பயணிகள் உணவு சாப்பிடுவதற்கு இனி அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. மிகக் குறைந்த விலையில் பயணிகளுக்கு உணவு வழங்கும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.

ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் இந்திய ரயில்வே உணவு வழங்கி வரும் நிலையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் பயணிகளுக்கு வெறும் 20 ரூபாய்க்கு முழு சாப்பாடு கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய்க்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படும்.
இந்திய ரயில்வே தனது புதிய திட்டத்தின் கீழ் ரூ.20 மற்றும் ரூ.50க்கு உணவுப் பொட்டலங்களை வழங்க முடிவு செய்துள்ளது. வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து வரும் உணவுகள் இவற்றில் கிடைக்கும். பாவ் பாஜி மற்றும் பூரி-சப்ஜி தவிர, இந்த உணவுப் பொட்டலங்களில் தென்னிந்திய உணவுகளும் கிடைக்கும்.

50 ரூபாய் பாக்கெட்டில் 350 கிராம் வரை உணவு இருக்கும். இதில் சோலே- பத்தூரே, கிச்சடி, சோல் ரைஸ், மசாலா தோசை, ராஜ்மனா- ரைஸ் மற்றும் பாவ் பாஜி போன்ற உணவுகளை ஆர்டர் செய்யும் வாய்ப்பைப் பெறலாம். இதனுடன் பேக் செய்யப்பட்ட தண்ணீரை வழங்கவும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.


 
20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொட்டலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. உண்மையில், ரயிலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கும் போது, ​​வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவுகள் சில நேரங்களில் கெட்டுப் போய்விடுவதால், ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலிலோ உணவு வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் அதன் விலை மிக அதிகம். எனவே இந்திய ரயில்வேயின் இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலைக்கு உணவு கிடைக்கும்.

இந்த திட்டம் இந்திய ரயில்வேயால் முதலில் 64 நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது முதலில் 6 மாத சோதனையில் தொடங்கப்படும். பின்னர் இந்த சேவையை இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பொதுப் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் இதன் மூலம் அதிக பயன் பெறுவார்கள். ஏனெனில், ரயில் நிலையங்களில் பொதுப் பெட்டிகள் நிற்கும் இடங்களில் தான் இந்த மலிவான உணவுக் கடைகள் அமைக்கப்படுகின்றன.