ரயிலில் பட்டாசு, பெட்ரோல் எடுத்துச் செல்கிறீர்களா? 3 ஆண்டுகள் வரை சிறைத்  தண்டனை!

 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணம் செய்வோர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆபத்தான பொருட்களை ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசுகள், பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் ரயில் பெட்டிகளில் தீ விபத்து மற்றும் வெடிப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பயணிகள் தங்களது உடைமைகளில் இத்தகைய பொருட்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டத்தை மீறினால் என்ன தண்டனை?

ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 164-ன் கீழ், விதிமுறைகளை மீறி ஆபத்தான பொருட்களைக் கொண்டு செல்பவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், ஆபத்தான பொருட்களால் ஏற்படும் சேதம், காயம் அல்லது இழப்புக்கும் சம்பந்தப்பட்ட பயணி பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ரயில் பயணத்தின்போது பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.