பயணிகளின் கனிவான கவனத்திற்கு... மைசூர் - கண்ணூர் இடையே சேலம் வழியாகச் சிறப்பு இரயில் இயக்கம்!

 

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு இரயில்களை இரயில்வே நிர்வாகம் தொடர்ந்து இயக்கி வருகிறது. அந்த வகையில் மைசூரில் இருந்து கண்ணூருக்கும், கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மைசூர் - கண்ணூர் சிறப்பு இரயில் (06227) சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு பங்காருபேட்டை வழியாக இயங்குகிறது. இந்த இரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடைந்து, ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக மதியம் 2 மணிக்குக் கண்ணூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக கண்ணூர் - பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு இரயில் (06228) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.25 மணிக்குக் கண்ணூரில் இருந்து புறப்படுகிறது. போத்தனூர், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியே பயணித்து மறுநாள் அதிகாலை 3.17 மணிக்குச் சேலம் இரயில் நிலையத்தை வந்து அடையும். பின்னர் அங்கிருந்து 3.20 மணிக்கு புறப்பட்டுப் பங்காருபேட்டை வழியாகக் காலை 8.35 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும். இந்தச் சிறப்பு இரயில் சேவை குறித்த முக்கிய விவரங்களைச் சேலம் இரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்தச் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். தொழில் நகரங்களான சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதி மக்களுக்கு இந்தத் திடீர் இரயில் சேவை பெரும் பயனுள்ளதாக அமையும்.