ரயில் பயணிகள் கவனத்திற்கு... கோவை - சோரனூர் ரயில்கள் ரத்து!
பாலக்காடு மற்றும் சோரனூர் இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்வதற்காக, கோவை - சோரனூர் இடையிலான ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் திருப்பூர் ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோவையிலிருந்து மாலை 4.25 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை - சோரனூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56603) நாளை (சனிக்கிழமை) கோவையிலிருந்து புறப்பட்டு பாலக்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு முதல் சோரனூர் வரையிலான அதன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், மறுமார்க்கத்தில் சோரனூரில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்பட வேண்டிய சோரனூர் - கோவை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56604) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாகச் செய்யப்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றத்தால், கேரளா மற்றும் கோவை இடையே பயணம் செய்யும் தினசரி பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை இதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.