ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து...  பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

 

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியான பெகாசி என்ற இடத்தில் நேற்று இரவு ஒரு பயணிகள் ரயிலும், நீண்ட தூர ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 84-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் இன்று காலை வரை நீடித்த நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாடகை காரின் மீது பயணிகள் ரயில் மோதியதால் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த ரயில் நடுவழியில் நின்றது. அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் குறிப்பாகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி மிக மோசமாகச் சேதமடைந்து சிதைந்து போனது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் காப்பாற்றப் போராடினர். ரயிலின் உடைந்த பாகங்களை வெட்டி எடுத்துப் பயணிகளை மீட்பதற்கு நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேரில் ஆய்வு செய்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.