சென்னை - பெங்களூரு ரயில்கள் பகுதியாக ரத்து!
தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவசரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாகச் சென்னை மற்றும் பெங்களூரு இடையே இயக்கப்படும் சில முக்கிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகளால் குறிப்பிட்ட சில ரயில்கள் சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே தற்காலிகமாகப் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி பெங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் லால்பாக் விரைவு ரயில் (வண்டி எண் 12608) ஜூன் 6 முதல் ஜூன் 21 வரை காட்பாடி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாகச் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் (வண்டி எண் 12607) ஜூன் 6 முதல் ஜூன் 21 வரை சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் குறிப்பிட்ட நாட்களில் சென்னையிலிருந்து புறப்படுவதற்குப் பதிலாகக் காட்பாடியில் இருந்தே தனது பயணத்தைத் தொடங்கும்.
இதேபோல் சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் (மைசூரு) விரைவு ரயில் (வண்டி எண் 16551) ஜூன் 6 முதல் ஜூன் 21 வரை சென்னை மற்றும் காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, காட்பாடியில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (வண்டி எண் 16552) ஜூன் 6 முதல் ஜூன் 21 வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த நாட்களில் காட்பாடி முதல் சென்னை வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.