சுக்கிரன் பெயர்ச்சி.. ஆகஸ்ட் முதல் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள்!

 

ஜோதிட சாஸ்திரத்தில் அழகு, செல்வம், காதல் மற்றும் ஆடம்பரத்தின் காரக கிரகமாக சுக்கிர பகவான் விளங்குகிறார். சுக்கிரன் சுமார் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார்.

கன்னி ராசி என்பது சுக்கிரனின் நீச்ச ராசியாகும் (பலவீனமான இடம்). ஒரு கிரகம் தனது நீச்ச ராசியில் சஞ்சரிக்கும் போது, அதனுடைய சுபப் பலன்கள் கணிசமாகக் குறையும். இதனால் ஆகஸ்ட் மாதம் கன்னி ராசியில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் நிதி, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில எதிர்மறையான தாக்கங்களைச் சந்திக்க வாய்ப்புள்ள 4 ராசிகள் குறித்து தெரிஞ்சுக்கோங்க. 

மேஷம் : பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதையோ அல்லது மற்றவர்களுக்குப் கடன் கொடுப்பதையோ இந்தக் காலகட்டத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி பயணம் செய்ய நேரிடலாம். மனக்குழப்பமும், ஆரோக்கியத்தில் சிறு சிறு அசௌகரியங்களும் தோன்றி மறையும்.

மிதுனம் : மிதுன ராசிக்கு 4-ஆம் வீட்டில் சுக்கிரன் பலவீனமடைவதால் குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது குடும்ப அமைதிக்கு உதவும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

துலாம் : துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் 12-ஆம் வீட்டில் மறைவது சுப பலன்களைக் குறைக்கும். விருப்பமில்லாத பயணங்கள் மேற்கொள்வதோடு, தேவையற்ற செலவுகளால் நிதி இழப்புகளும் ஏற்படலாம். காதல் மற்றும் குடும்ப உறவுகளில் தவறான புரிதல்கள் வரக்கூடும் என்பதால் திறந்த மனதுடன் பேசுவது அவசியம். முக்கிய நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன் பலமுறை ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.

மீனம் : மீன ராசிக்கு 7-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில்களைத் தொடங்குவதைத் தற்காலிகமாகத் தள்ளிப்போடுவது நல்லது. பங்குச்சந்தை மற்றும் பெரிய முதலீடுகளில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதில் அதிக கவனம் தேவை.பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியைப் பேணுவது சாதகமான சூழலை உருவாக்கும்.

சுக்கிரனின் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைக்க எளிய பரிகாரங்கள்

வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்கு வெள்ளை நிற இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாராயணம் செய்யலாம். வெள்ளிக்கிழமை தோறும் ஏழை எளியவர்களுக்கு அரிசி, பால், சர்க்கரை அல்லது வெள்ளை நிற ஆடைகளை தானமாக வழங்கலாம். வெள்ளிக்கிழமைகளில் "ஓம் சூன் சுக்ராய நமஹ" என்ற சுக்கிர மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நன்மைகளைத் தரும்.