சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு - திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவிப்பு!

 

சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில், தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீட்டுத் திட்டத்தை வழங்கத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு காலப் பூஜைகளை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் விபத்து மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் ஆன்லைன் முன்பதிவு மற்றும் நேரடி ஸ்பாட் புக்கிங் மூலம் வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் தடையின்றிப் பொருந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்குச் கூடுதல் சுமை ஏதும் ஏற்படுத்தாத வகையில் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்திற்காகப் பக்தர்களிடம் யாரிடமும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனத் தேவசம் போர்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காப்பீட்டுக்கான மொத்தப் பிரீமியம் தொகையான சுமார் ரூ.1.5 கோடியை திருவிதாங்கூர் தேவசம் போர்டே முழுமையாகச் செலுத்துகிறது.