வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை... நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடலநிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
வயோதிகம், மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக 101 வயதைக் கடந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, பிப்ரவரி 1ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில், நேற்று மாலை திடீரெனப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அவர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சேகர்பாபு மற்றும் சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், "தோழர் நல்லகண்ணுவின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய அந்தப் போராளி, இப்போது இயற்கையுடன் போராடி வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்" என வேதனையுடன் தெரிவித்தார்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் நேர்மையான மற்றும் எளிமையான அரசியல்வாதிகளில் ஒருவராக மதிக்கப்படும் நல்லகண்ணு, விரைவில் நலம் பெற வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.