முதல்வரை வரவேற்க மதுரையில் வெட்டப்படும் சாலையோர மரங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

 

'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கும், புனரமைக்கப்பட்ட காந்தி மியூசியத்தைத் திறந்து வைப்பதற்கும் முதலமைச்சர் விஜய் இன்று மதுரை செல்ல உள்ளநிலையில், மியூசியம் பகுதியில் சாலை ஓர மரங்கள் அகற்றப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரைக்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் விஜய், அங்குப் புதிதாகச் செயல்படுத்தப்பட உள்ள 'தாய் மாமன் தங்க மோதிரம்' நலத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும், புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட உள்ளார்.

முதலமைச்சரின் வருகையையொட்டியும், பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளைச் சீரமைக்கும் நோக்கத்துடனும் காந்தி மியூசியம் பகுதிக்கு அருகில் உள்ள சாலை ஓர மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளுக்காகப் பல ஆண்டுகால மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் மதுராந்தகம் சென்றிருந்த போது, அந்த பகுதியில் விஜய் ரோடு ஷோவுக்காக 150 பனை மரங்கள் வெட்டப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரை மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.