₹250 கோடிக்கு விற்பனைக்கு வரும் 'டிரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு!

 

உலகின் மிக பிரம்மாண்டமான மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடுகளில் ஒன்றான "கஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள டைனோசர் பாசில், வரும் ஜூலை 14ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல 'சோத்பீஸ்'  ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த இந்த அரிய பொக்கிஷம் சுமார் 250 கோடி ரூபாய் ($30 மில்லியன் டாலர்) வரை ஏலம் போகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடு டைனோசர் இனங்களிலேயே மிகவும் கொடூரமான மற்றும் வலிமையான வேட்டையாடியாகக் கருதப்படும் டைரனோசரஸ் ரெக்ஸ் வகையைச் சேர்ந்ததாகும். இது சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த 'கஸ்' டைனோசர் எலும்புக்கூடு சுமார் 38 அடி (11.6 மீட்டர்) நீளமும், 12.5 அடி (3.8 மீட்டர்) உயரமும் கொண்டது.

பொதுவாகக் கண்டறியப்படும் டைனோசர் எலும்புகள் சிதைந்து காணப்படும் நிலையில், இந்த 'கஸ்' எலும்புக்கூடு 183 அசல் எலும்புகளுடன், கிட்டத்தட்ட 63 சதவீதம் முழுமையான கட்டமைப்போடு மிக நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.

அமெரிக்காவின் சவுத் டகோட்டா மாகாணத்தில் உள்ள ஹார்டிங் கவுண்டியில் வசித்து வந்த கேரி "கஸ்" லிக்கிங் என்ற விவசாயிக்குச் சொந்தமான 6,500 ஏக்கர் பரப்பளவிலான மாட்டு மேய்ச்சல் நிலத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த அரிய பாசில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. நிலத்தின் மேல் பகுதியில் சிறு எலும்புத் துண்டுகளைக் கண்ட கேரி, அதற்கு அடியில் பெரிய ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்து அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்குத் தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 'தெரோபோடா எக்ஸ்பெடிஷன்ஸ்' என்ற வணிகரீதியான தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கடந்த 2021 முதல் 2023 வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் போர்க்கால அடிப்படையில் ஆய்வு நடத்தி இந்த ராட்சத எலும்புக்கூட்டை முழுமையாக மீட்டெடுத்தது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் முழுமையடைவதற்கு முன்பாகவே நிலத்தின் உரிமையாளரான கேரி லிக்கிங் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவர் முழுமையாகப் பார்க்க முடியாமல் போன இந்த டைனோசருக்கு, அவரது நினைவாகவே "கஸ்" என்று பெயரிடப்பட்டது.

தற்பொழுது சர்வதேச அளவில் நடைபெற உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலத்தின் மூலம் கிடைக்கும் முழுத் தொகையும், கேரியின் மறைவுக்குப் பின் தவித்து வரும் அவரது மனைவி டானா லிக்கிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சென்றடையும் என சோத்பீஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிவியல் அறிஞர்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்கள் இடையே இந்த ஏலம் தற்பொழுது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.