இன்று நாடு முழுவதும் அஞ்சலி.. பஹல்காம் தாக்குதலின் ஓராண்டு நினைவு நாள் - பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு இதே நாளில், அமைதிப் பள்ளத்தாக்கான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியானது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்தத் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்திய ராணுவம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
"இந்தியா எதையும் மறக்காது" என்று குறிப்பிட்டுள்ள ராணுவம், "மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, இந்தியாவின் பதில் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது; இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தக்க பாடம் புகட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் அச்சம் நீங்கி, தற்போது காஷ்மீருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் கிடையாது என்பதை இந்த நினைவு நாளில் இந்திய ராணுவம் மீண்டும் உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு முழுவதும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.