திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி!

 

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த அரசியல் தலைவர் கு.பா.கிருஷ்ணனின் மகன் க.சிரஞ்சீவி வேட்பாளராகக் களம் இறக்கப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியை அவர் தக்கவைக்க வேண்டியிருந்ததால், பெரம்பூர் தொகுதியைத் தன்வசம் வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இத்தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

திருச்சியில் இன்று நடைபெற்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கு.பா.கிருஷ்ணனின் மகன் க.சிரஞ்சீவியை விஜய் திடீரென மேடைக்கு அழைத்து முன்னிறுத்தினார்.

திருச்சி வட்டாரத்தில் நல்ல செல்வாக்குக் கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வரும் க.சிரஞ்சீவியை, முதலமைச்சர் விஜய் பொதுமேடையில் ஏற்றி கௌரவித்திருப்பது வெறும் மரியாதை நிமித்தமானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்குத் தொகுதியை மீண்டும் தவெக கோட்டையாகத் தக்கவைக்க, வலுவான உள்ளூர் முகம் தேவை என்பதால், சிரஞ்சீவியையே அங்கு இடைத்தேர்தல் வேட்பாளராக தவெக தலைமை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை.