கொலை நகரமாகும் திருச்சி... ஆட்டோ மெக்கானிக் கழுத்து அறுத்து கொலை!
திருச்சி தென்னூர் பகுதியில் ஆட்டோ மெக்கானிக் ஒருவர் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தென்னூர் வெள்ளாளத் தெருவைச் சேர்ந்தவர் நிஷா. இவரது மகன் பாரூக் (32), இவர் அப்பகுதியில் ஆட்டோ மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் பாரூக் கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்துள்ளார். கொலை நடந்த வீட்டின் உள்ளே பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்துள்ளன. இதனால் இது கொள்ளை முயற்சியின் போது நடந்த கொலையா அல்லது முன்விரோதம் காரணமான கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தகவல் அறிந்த தில்லைநகர் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரூக்கின் உடலைக் கைப்பற்றினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த கைரேகைகள் மற்றும் முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட பாரூக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்கத் தில்லைநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.