மர்ம காய்ச்சலுக்கு 19 வயது கல்லூரி மாணவி பலி: பொதுமக்கள் அச்சம்!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகள் லோகவாணி (19). இவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக லோகவாணிக்கு விட்டு விட்டு காய்ச்சல் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பனிப்பொழிவு மற்றும் சுகாதாரச் சீர்கேடு காரணமாக காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.