திருச்சி அருகே கோர விபத்து: காதணி விழாவுக்குச் சென்று திரும்பிய வேன் மரத்தில் மோதி 8 பேர் பலி!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளர்கள் சிலர், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவிற்கு ஆம்னி வேனில் சென்றுள்ளனர். விழா முடிந்த பிறகு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தப் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த வேப்பமரத்தில் அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், பாவாடை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.