ஒரே குடும்பத்தில் 3 எம்.எல்.ஏ-க்கள்... தேர்தலால் நிகழ்ந்த அரசியல் அதிசயம்!
தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அரசியல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரபல தொழிலதிபர் 'லாட்டரி கிங்' சாண்டியாகோ மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், இந்தத் தேர்தலில் மூன்று வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் (எம்.எல்.ஏ) தேர்வாகியுள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்ட்டினின் மனைவியான லீமாரோஸ் மார்ட்டின், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தவெக வேட்பாளரை 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதேபோல், மார்ட்டினின் மகன் ஜோசப் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் எல்.ஜே.கே (LJK) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார். இவர்கள் இருவரும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தின் மூன்றாவது எம்.எல்.ஏ-வாக, மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா உருவெடுத்துள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு, சுமார் 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கொள்கை கொண்ட மூன்று கட்சிகளில் (அதிமுக, எல்.ஜே.கே, தவெக) நின்றாலும், மூவருமே மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது இந்தத் தேர்தலின் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.