பயணிகளின் கனிவான கவனத்திற்கு...  திருச்சி வழித்தட  ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்!

 

திருச்சி இரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு முக்கிய வழித்தடப் பிரிவுகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருச்சி வழியே இயக்கப்படும் பல பயணிகள் மற்றும் விரைவு இரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பல இரயில்களின் சேவைகள் குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தட மாற்றங்களால் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதன்படி திருச்சி-காரைக்கால் டெமு இரயில் நாளை முதல் 31-ந்தேதி வரை திருச்சிக்கும் திருவாரூருக்கும் இடையே மட்டுமே இயங்கும். இதேபோலத் திருச்சி-மயிலாடுதுறை பாசஞ்சர் இரயில் ஆடுதுறை வரையிலும், காரைக்குடி-மயிலாடுதுறை இரயில் திருவாரூர் வரையிலும் மட்டுமே இயக்கப்படும். மேலும் மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் இரயில் ஜூலை 22 முதல் ஆகஸ்டு 2 வரையிலான குறிப்பிட்ட தேதிகளில் கரூர் வரை குறைக்கப்படும். அதேபோலக் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஹவுரா அதிவிரைவு இரயிலும் ஜூலை 25 அன்று சந்தராகச்சி வரை மட்டுமே இயங்கும்.

மறுமார்க்கத்தில் காரைக்கால்-திருச்சி டெமு இரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்குத் திருச்சிக்குப் புறப்பட்டுச் செல்லும். மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆடுதுறையில் இருந்து நள்ளிரவு 12.58 மணிக்குத் தன் பயணத்தைத் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோலச் சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்தும், ஹவுரா-திருச்சி அதிவிரைவு இரயில் சந்தராகச்சியில் இருந்தும் புறப்படும். பயணிகள் அனைவரும் இந்த நேர மாற்றங்களை அறிந்து கொண்டு தங்களின் பயணங்களை மேற்கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.