145 பயணிகளுடன் சென்ற திருச்சி - துபாய் விமானம் பாதியிலேயே திரும்பியது!
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ளதால், வான்பரப்பில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாகத் திருச்சியிலிருந்து துபாய் சென்ற விமானம் நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 145 பயணிகளுடன் துபாய் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், போர் பதற்றம் காரணமாகப் பாதியிலேயே இந்தியாவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் ஏவுகணைத் தாக்குதல் அச்சம் காரணமாக மூடப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. வளைகுடா நாடுகளின் வான்பரப்பில் நுழைவது பயணிகளின் உயிருக்கு ஆபத்து என்பதால், விமானி உடனடியாக விமானத்தைத் திருப்பி இந்தியா நோக்கி இயக்கினார்.
சுமார் 3 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 145 பயணிகளும் அதிர்ஷ்டவசமாகப் பாதுகாப்பாக உள்ளனர், இருப்பினும் தங்களது பயணம் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை வீசி வருகிறது. அபுதாபி, துபாய், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியைப் பொதுப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடியுள்ளன.
சென்னை, திருச்சி பாதிப்பு: திருச்சியில் மட்டுமன்றி, சென்னையிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்களும் இன்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. போர்ச் சூழல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு முழுத் தொகையும் (Refund) திரும்ப வழங்கப்படும் அல்லது நிலைமை சீரான பிறகு மாற்றுத் தேதிகளில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.