திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு!
திரிபுரா மாநிலத்தில் அகர்தலா மாநகராட்சி உட்பட 16 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. மொத்தமுள்ள 268 வார்டுகளுக்கான தேர்தலில் 810 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முன்னதாக 21 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 345 இடங்களில் 77 இடங்களை பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வடகிழக்கு மாநில அரசியலில் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது