‘த்ரிஷா பேரவை’ விவகாரம்... ஜெ. தீபா கடும் எச்சரிக்கை!
நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘இரும்புப் பெண்மணி’ மற்றும் ‘புரட்சித் தலைவி’ போன்ற அடைமொழிகள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே உரியவை என்றும், அவற்றைச் சினிமா பிரபலங்களுடன் ஒப்பிட்டுப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜெ. தீபா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தனது அத்தையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவை, வெறும் பிரபலங்கள் என்ற அடிப்படையில் சமகால நடிகைகளுடன் தேவையின்றி ஒப்பிடுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் வாரிசு, அண்ணன் மகள் மற்றும் குடும்பத்தினர் என்ற முறையில் அவரது பட்டங்களையும் அடைமொழிகளையும் பிறர் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும், தேவைப்பட்டால் இது தொடர்பாகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெ. தீபா எச்சரித்துள்ளார்.
‘இரும்புப் பெண்மணி’ உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அடைமொழிகள் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சொந்தமானவை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜெ. தீபா, இந்த விவகாரத்தால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் மிகுந்த வேதனை அடைந்து வருவதாகவும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஏற்கெனவே இந்தப் பேரவை விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து நடிகை த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.