"காங்கிரசுக்குக் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது" - டிஆர்எஸ் தலைவர் கவிதா கைது!
தெலங்கானாவில் நில உரிமைப் போராட்டத்தின் போது அரங்கேறிய எதிர்க்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தெலங்கானா ரக்ஷனா சேனா கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகளுமான கே. கவிதா, ஹைதராபாத் அருகே உள்ள போடுப்பல் பகுதியில் நில உரிமை கோரி நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தின் போது போலீசாரால் பலவந்தமாகக் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
உப்பல் தொகுதிக்குட்பட்ட போடுப்பல் நாசாரம் தொழிற்பேட்டை பகுதியில், "தெலங்கானா உத்யம கருல ரக்ஷனா காலனி" என்ற பெயரில் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துத் தெலங்கானா ரக்ஷனா சேனா கட்சியினர் இன்று காலையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலங்கானா தனி மாநில உருவாக்கப் போராட்டத்தின் போது தீவிரமாகப் பங்கேற்ற தியாகிகள் மற்றும் வீராங்கனைகளுக்குத் தலா 250 சதுர அடி வீட்டு மனை நிலம் வழங்கப்படும் எனத் தற்போதைய ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்று நீண்ட நாட்களாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், தியாகிகளுக்கு உடனடியாக நிலங்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திக் கவிதா தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பெண்கள் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டக் களத்திற்குத் தெலங்கானா ரக்ஷனா சேனா தலைவர் கவிதா வருகை தந்து, அங்குப் பாரம்பரிய முறைப்படி வழிபாடுகளை நடத்தத் தொடங்கிய போது, அங்குத் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான போலீசார் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் கவிதா மற்றும் அவருடன் இருந்த பெண் நிர்வாகிகளைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல் வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பொல்லாரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் பொல்லாரம் காவல் நிலையத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா, காங்கிரஸ் அரசின் இந்த அடக்குமுறைக்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.
"தியாகிகளின் நில உரிமைகளுக்காகவும், பெண்களின் நலனுக்காகவும் அமைதியான முறையில் போராடிய எங்கள் மீது போலீசார் மிகக் கொடூரமாகத் தடியடி நடத்தியுள்ளனர். உப்பல் மண்ணில் இன்று தியாகிகளின் இரத்தமும், பெண்களின் இரத்தமும் சிந்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரினால், அதற்குப் பதிலாக லத்திக் கம்புகளால் அடிப்பதுதான் இவர்களின் ஜனநாயகமா? இந்த தடியடிக்கு அஞ்சி நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. இந்த அடக்குமுறையின் மூலம் தெலங்கானா காங்கிரஸ் அரசுக்குக் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. தியாகிகளுக்கு நிலம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்."
கவிதாவின் கைதைக் கண்டித்துத் தெலங்கானா ரக்ஷனா சேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொல்லாரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடிய விடியத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.