பைக் மீது லாரி மோதி கோரவிபத்து... தந்தை கண் முன்னே 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

 

தருமபுரி மாவட்டம் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், தந்தை கண்முன்னே இரு சிறுவர்கள் லாரி ஏறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குண்டலப்பட்டி பகுதிக்கு அருகில் ஹரி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது குழந்தைகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிச் சென்ற பைக் திடீரென நிலைதடுமாறிச் சாலையில் கீழே விழுந்தது.

பைக் கீழே விழுந்த வேகத்தில், அதற்குப் பின்னால் வந்த அதிவேக லாரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிச் கீழே விழுந்தவர்கள் மீதும் பைக் மீதும் ஏறியது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த கதிர்வேல் (6) மற்றும் சஞ்சய் (3) ஆகிய இரண்டு சிறுவர்களும் லாரியின் சக்கரத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் தந்தையான ஹரி, இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தந்தையின் கண் முன்பாகவே அவரது இரண்டு மகன்களும்அடுத்தடுத்து விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி பொதுமக்களின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.