தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் வழக்கு - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு!
கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கொண்டு செல்லத் தமிழக அரசு பிறப்பித்த தடையை ரத்து செய்யக்கோரி, தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக எல்லையோர மாவட்டங்கள் வழியாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. கனிமவளக் கடத்தலையும் விதிமீறல்களையும் தடுக்கும் பொருட்டு, பிற மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தடை விதித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசின் இந்தத் திடீர் தடையால் ஆயிரக்கணக்கான லாரிகள் இயங்காமல் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முறையான அனுமதிச் சீட்டுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு கனிமவளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளையாவது அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் தடை உத்தரவைச் செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.