ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்கள் நிறுத்தி வைக்க டிரம்ப் ஒப்புதல்... பாகிஸ்தானின் வேண்டுகோள் ஏற்பு!
"இன்றிரவு ஒரு நாகரிகமே அழியக்கூடும்" என்று ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் அடிப்படையில், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால், 2 வார காலப் போர்நிறுத்தத்திற்கு டிரம்ப் சம்மதித்துள்ளார்.
தமது முடிவிற்கான காரணங்களை அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், ஈரானில் தாங்கள் திட்டமிட்டிருந்த அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்கப் படைகள் ஏற்கனவே அடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஈரானிடமிருந்து 10 அம்சங்கள் கொண்ட ஒரு அமைதித் திட்ட முன்மொழிவை அமெரிக்கா பெற்றுள்ளது. இது பேச்சுவார்த்தையைத் தொடர ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும் என அவர் நம்புகிறார். மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை நிலைநாட்ட ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்த 2 வார கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் சீராகும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்த மோதலில் ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அமைதி முயற்சி ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.