கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் எழுதிய கடிதம்: திறந்து பார்க்காமல் விட்டுச் சென்ற வடகொரிய தூதர் - பரபரப்பு தகவல்!

 

 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தலைவர்களிடையே பேச்சுவார்த்தையைத் தொடங்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடைசி முயற்சியாகக் கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் கடிதம் எழுதிய நிலையில், அதனைப் பெற்றுக்கொண்ட வடகொரிய தூதர் திறந்துகூட பார்க்காமல் ஐநா சபை கூட்டத்திலேயே விட்டுச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டில் வடகொரியா சென்ற டிரம்ப், கிம் ஜாங் உன்னுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜாங்க உறவில் இழுபறி நீடித்து வருகிறது.